சென்னை: ஜிஎஸ்டி குறைப்பால், ஆவின் பால் பொருட்களான நெய், பனீர் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் யுஎச்டி பால் மற்றும் பனீர் வகைகளுக்கு விலக்கு அளிக்கவும் நெய், வெண்ணெய், பாலாடை உள்ளிட்ட பால் பொருட்கள், ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு நேற்று அமலுக்கு வந்தது.
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவினில் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டருக்கு ரூ.40 விலை குறைந்துள்ளது. ரூ.120-க்கு விற்கப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110-க்கும் வெண்ணெய் விலை ரூ.50 வரையும் குறைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜிஎஸ்டி குறைப்பு அடிப்படையில், ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சில பொருட்கள் தள்ளுபடி கொடுக்கப்பட்டது. அந்த பொருட்களுக்கான தள்ளுபடியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஜிஎஸ்டி குறைப்பின்கீழ், ஆவின் பால் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.