கோவை: ‘ஜாப் ஒர்க்’ பிரிவில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள தொழில்துறையினர், 5 சதவீதமாக குறைக்கவும் அதற்கு செலுத்தும் வரியை திரும்ப பெற்றுக்கொள்ளும் சலுகை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது தொழில் முனைவோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும்.
இதை தவிர்த்து மற்ற வரி சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது” என்றார். தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறும்போது, “குறுந்தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கேட்டு வந்த நிலையில், 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சலுகையை திரும்ப பெற முடியும் என்றாலும் கூட குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்களுக்கு நிதியை பெற 90 நாட்கள் வரை ஆகிறது.
எனவே, அக்காலகட்டத்தில் நடப்பு மூலதனம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு வரியை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சருக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்றார். கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவிற்கு 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட வரியை 5 சதவீதமாக குறைத்தால், வரியை திரும்ப பெறும் சலுகை பெற முடியாது என கூறப்படுகிறது.
நடப்பு மூலதனம் பாதிக்காமல் இருக்க 5 சதவீமாக வரியை குறைப்பதுடன் ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ எடுத்துக் கொள்ளும் சலுகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றார்.
இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகு நாதன் கூறும்போது, “வரி சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. குறுந் தொழில்முனைவோருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும். எனவே, இப்பிரிவினருக்கு வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார்.
‘சிஐஏ’ தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார் நாகராஜன் கூறும்போது, “ஜாப் ஒர்க் பிரிவு நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதால் நடப்பு மூலதனம் பாதிக்கப்படும். பணி வாய்ப்புகள் இழக்கும் நிலை ஏற்படும். பெரிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு ‘ஜாப் ஒர்க்’ மாற்றும் அபாயம் உள்ளது. எனவே, வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களை பாதுக்கவும், தொழில் வளர்ச்சிக்கு உதவவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.