கரூர்: அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.230 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.2,000 கோடி) மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 60,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்திருப்பதால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் உற்பத்தியாளர்களுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிடுகின்றனர்.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குகூட வாடிக்கையாளர்கள் அதிக தள்ளுபடி கேட்கின்றனர். உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் நிறுத்தப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அமெரிக்க மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து பணம் பெற முடியாமல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
பல அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே திவால் அறிவித்துள்ளன. மேலும், சில நிறுவனங்கள் விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 70 மில்லியன் மதிப்பில் எதிர்பார்க்கப்பட்ட ஆர்டர்கள் தற்போதைய சூழலில் கேள்விக்குறியாக உள்ளன. அவை வராமல் போகலாம். அல்லது மிகப்பெரிய தள்ளுபடிகளுடன் மட்டுமே வர வாய்ப்பு உள்ளது. மேலும், அமெரிக்க சந்தை ஆர்டர்களை சார்ந்த சில நிறுவனங்கள், தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. உற்பத்தி திறனும் குறைக்கப்படுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் குறைந்தது 30,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது கரூர் பகுதியின் சமூக, பொருளாதார நிலையை பாதிக்கும். அரசு சிறப்பு கடன் வசதிகள், வங்கி கடன் வரம்புகளை உயர்த்தி உடனடி நிதி ஆதரவு அளிக்க வேண்டும்.
இஎஸ்ஐ, பிஎப் பங்களிப்பு, மின் கட்டணம், சாலை வரி ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்க வேண்டும். அமெரிக்காவை மட்டுமே சாராமல் மற்ற சந்தைகளில் கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வியாபாரிகள் வெளிநாட்டு கண்காட்சிகள், சந்தைகள் சென்று ஆர்டர்கள் பெற ஊக்குவிக்க வேண்டும். புதிய சந்தைகளில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்த சூழலில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது ஏற்றுமதியாளர்களை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.