மும்பை: நகர பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கினால் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையாக ரூ.50,000-ஐ கணக்கில் வைக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி.
இதற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பும், அழுத்தமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதை மாற்றி அறிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. அதன்படி ரூ.50,000 என இருந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.10,000 என இருந்தது.
இந்த சூழலில் தற்போது மாற்றி அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இருப்பு தொகை, ஏற்கெனவே இருந்த குறைந்தபட்ச தொகையை காட்டிலும் ரூ.5,000 கூடுதலாகும். இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ‘தங்களது ஒழுங்குமுறை வழிகாட்டுதலில் இல்லை’ என சொல்லி இருந்தார்.
புறநகர் பகுதியில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.7,500 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதியில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை இருப்பில் வைக்க வேண்டியுள்ளது. சில பொதுத்துறை வங்கிகள் இதற்கு விலக்கு அளிக்கின்றன.