சென்னை: சென்னையில், ரூ.35 லட்சம் மதிப்பில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் உள்பட 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்களில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆவின் நிறுவனம் ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் சார்பில், நாள்தோறும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பலவகைகளில் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. இது தவிர, 220-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உபபொருட்கள் விற்கப்படுகின்றன. பால் மற்றும் பால் உபபொருட்களை 35 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. பால் பொருட்கள் விற்பனையில் ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இதற்கிடையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து ஆவின் ஜங்ஷன் பாலகங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக விருகம்பாக்கம், ராஜ்பவன், அசோக்நகர், அண்ணாநகர், எழிலகம் ஆகிய 5 ஆவின் ஜங்ஷன் பாலகங்களில் சீரமைப்பு பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பில் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது, முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மேலும் 7 ஆவின் ஜங்ஷன் பாலங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆவின் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதில் ஆவின் பாலகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவற்றில் ஆவின் ஜங்ஷன் பாலங்களை சீரமைக்க திட்டமிட்டு, முதல் கட்டமாக, 5 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் ஒரு மாதத்தில் முடிந்து விடும்.
இதுபோல, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பார்க் ரோடு, வசந்தம் காலனி, அம்பத்தூர், டிஏவி மற்றும் எஸ்ஐஇடி ஆகிய 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. 15 நாட்களில் நிறுவனங்களை தேர்வு செய்து, ஒப்பந்தம் வழங்கப்படும். அதன் பிறகு, 2 மாதங்களில், சீரமைப்பு பணி முடிந்து விடும். இந்த பாலகங்களை வாடிக்கையாளர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக மாற்றுவது எங்கள் நோக்கமாகும்.