மாநகராட்சி சார்பில், ரூ.50 லட்சத்தில் வேளச்சேரி மற்றும் கே.கே.நகரில் ஆன்லென் டெலிவரி ஊழியர் ஓய்வுக் கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, ஆன்லைனில் உணவு, காய்கறி, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்களை பொதுமக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. இந்த ஆர்டர்களை பெற்று, பொருட்களை டெலிவரி செய்யும் பணியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. இதற்காக, டெலிவரி செய்யும் ஊழியர்கள் முக்கிய உணவகங்கள் முன்பு நீண்ட நேரம் காத்திருத்து, தயாரான உணவை பெற்று, டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக காத்திருக்கும் நேரத்தின் போது நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பது, செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியாத நிலை, இயற்கை உபாதைகளை கழிக்க போதிய வசதியின்மை, வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமை போன்ற அடிப்படை பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அண்ணா நகர் 2-வது நிழற்சாலை, அண்ணா நகர் ரவுண்டானா, ராயப்பேட்டையில் அண்ணா சாலை- ஜிபி சாலை சந்திப்பு, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், மயிலாப்பூர், தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, நுங்கம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு டெலிவரி ஊழியர்கள் அதிக அளவில் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
இவர்கள் சாலையில் காத்திருப்பதால், அங்கு போக்கு வரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. இவர்கள் கோடை காலம் மற்றும் மழை காலங்களில் காத்திருக்க இடமின்றி அவதியுறுகின்றனர். தற்போது உணவு டெலிவரி தொழிலில் மகளிரும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களை விட இவர்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் சில இடங்களில் குளி ரூட்டப்பட்ட ஓய்வுக் கூடங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே, தி. நகர், அண்ணா நகரில் அமைத்துள்ள நிலையில், மேலும் 2 இடங்களில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரூ.50 லட்சம் செலவில் கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியில் அமைக்கப்பட உள்ளது.
இவற்றில் இந்த ஓய்வுக் கூடத்தில் இருக்கை வசதிகள், கழிவறை, ஸ்மார்ட் ஃபோன் சார்ஜிங் வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.