சென்னை: சென்னையில் இன்று முதல் டீ, காபியின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ, காபி இருந்து வருகின்றன. பலருக்கும் இவற்றை குடித்தால்தான் வேலையே ஓடும் என்கிற வகையில் மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றன. சென்னை உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் தற்போது டீ ரூ.12-க்கும், காபி ரூ.15-க்கும் விற்பனையாகி வருகிறது. இது தவிர சிறிய அளவிலான கடைகளில் டீ ரூ.10-க்கும், காபி ரூ.12-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் டீயின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கோயம்பேடு, அடையாறு, மயிலாப்பூர், திருவான்மியூர், புரசைவாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள டீக்கடைகளின் முகப்பில் நேற்று டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றின் விலை இன்று (செப். 1) முதல் உயர்த்தப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தன. அதன்படி டீயின் விலை ரூ.15 ஆகவும், காபியின் விலை ரூ.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லெமன் டீ – 15, பால் – ரூ.15, ஸ்பெஷல் டீ – 20, ராகிமால்ட், சுக்கு காபி – ரூ.20, ஹார்லிக்ஸ், பூஸ்ட் – ரூ.25 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளன. பார்சல் டீ ரூ.45 ஆகவும், பார்சல் காபி ரூ.60 ஆகவும், பார்சல் பூஸ்ட் ரூ.70 ஆகவும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஜ்ஜி, போண்டா, சமோசா ஒன்றுக்கு ரூ.15 வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், “சென்னையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2016-17-க்குப் பிறகு டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் வெறும் 20 சதவீதம் கடைகள் மட்டுமே விலையை உயர்த்தியுள்ளன. மீதமுள்ள கடைகளில் படிப்படியாக உயர்த்தவாய்ப்புள்ளது. பால், காபித் தூள், டீத்தூள் விலை உயர்வு, வாடகை, மின்கட்டண உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வாதாரத்துக்காக இந்த விலை உயர்வுக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.