மும்பை: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து ஸ்திரத்தன்மை திரும்பியுள்ளது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீட்டை அதிகரித்ததையடுத்து வங்கி, மோட்டார் வாகன துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. பணவீக்கம் குறைவு, பணப்புழக்கம் அதிகரிப்பு போன்றவையும் சந்தையின் ஏற்றத்துக்கு ஆதரவாக அமைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,000.36 புள்ளிகள் (1.21%) அதிகரித்து 83,755.87-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 304.25 புள்ளிகள் உயர்ந்து 25,549 புள்ளிகளில் நிலைகொண்டது.
நாட்டின் மதிப்புமிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை 1.91 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, அதன் சந்தை மதிப்பு செப்டம்பர் 27,2024-க்குப் பிறகு முதல் முறையாக ரூ.20 லட்சம் கோடியை கடந்தது.
எச்டிஎப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் நிறுவனப் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.