மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று 145 கோடி இந்தியர்களின் கொண்டாட்ட நாள். நமது மிகவும் மரியாதைக்குரிய அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாள். இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக சமூகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் குடும்பத்தின் சார்பாகவும், அம்பானி குடும்பத்தின் சார்பாகவும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் அமிர்த காலத்தில் மோடியின் அமிர்த மஹோத்சவம் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடி தொடர்ந்து இந்தியாவுக்கு சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.
நமது தாய் நாட்டை பூமியின் மிகச் சிறந்த தேசமாக மாற்றுவதற்காக, எல்லாம் வல்ல கடவுள் மோடியை ஒரு அவதார புருஷராக அனுப்பியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நெருக்கமாக நான் அறிந்திருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம். இந்தியா மற்றும் இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இவ்வளவு அயராது பாடுபடும் ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை.
முதலில் அவர் குஜராத்தை பொருளாதார சக்தி மையமாக மாற்றினார். தற்போது அவர் முழு இந்தியாவையும் உலக வல்லரசாக மாற்ற முயன்று வருகிறார். எனது 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து நமது பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.