கோவை: நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இந்திய பம்ப்செட் தொழில், சமீப காலமாக சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு உதவ வேண்டும் எனவும், தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் பம்ப்செட் உற்பத்தி தொழிலில் உலகளவில் இந்தியா மிகச் சிறந்து விளங்குகிறது.
தமிழகம் (கோவை), குஜராத் போன்ற மாநிலங்களில் வீடு, விவசாயம், தொழில் நிறுவனங்கள், கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் பல வகையான மோட்டார் பம்ப்செட் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேசிய அளவில் மோட்டார் பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள பம்ப்செட் நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பம்ப்செட் தொழில் சமீப காலமாக சீனாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட்களால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக் கூறியதாவது: இந்திய பம்ப் தொழில் வெற்றிகரமாக நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வர்த்தகம் கொண்டுள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு பின் 2021-ம் ஆண்டு முதல் ஏற்றுமதி 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இத்தகைய பாரம்பரியம் கொண்ட தொழில், சமீப காலமாக சீனாவால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தகைய பம்ப்செட் பொருட்கள் சீனாவில் இருந்து அதிகம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்நாட்டில் உற்பத்தி யாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவில் இருந்து இறக்குமதியை வெகுவாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘லகு உத்யோக் பாரதி’ தேசிய தொழில் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கல்யாண் சுந்தரம் கூறும் போது, “உள்நாட்டு சந்தையில் தமிழகம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பம்ப்செட் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
நகரமயமாக்கல் அதிகரித்து வரும் காரணத்தால் கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, இத்தகைய பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்ய இந்திய தொழில் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு மின் கட்ட ணத்தை குறைப்பதுடன், தொழில் துறையினரை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும்” என்றார். தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும்போது, “இந்திய பம்ப்செட் பொருட்கள் ஏற்றுமதியை ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அதிகரிக்க வேண்டும்.
குறைந்த விலையில் தரமான கழிவுநீர் வடிகால் மோட்டார் பம்ப்செட் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவும் மோட்டார் பம்ப்செட் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இத்தகைய பொருட்கள் சீனாவில் இருந்து மிக அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா வில் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு உள்நாட்டு தொழில் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றார்.