சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.
சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு நிறைவு விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்து, வங்கியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: நம்நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வங்கிகள் பங்களிப்பு நிதி பரிவர்த்தனையோடு மட்டும் நிற்காமல் பல்வேறு வகைகளில் விரிவடைந்து வருகின்றன.
இதுதவிர நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக உள்ளன. வளர்ந்து வரும் இந்தியாவில் வங்கி வசதிகள் குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். சிட்டி யூனியன் வங்கியின் 50 சதவீத கிளைகள் ஊரகப் பகுதிகளில் இருப்பது பாராட்டத்தக்கது. ஒருங்கிணைந்த நிதி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் மூலம் 56 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. நேரடி நிதியுதவி, மானியம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் இடையூறு இன்றி பயனாளிகளுக்கு செல்வதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது.
விவசாயிகள் முன்னேற்றம், ஊரகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குதான் வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். சரியான நேரத்தில் கடன், நிதி கையாள்வது பற்றிய அறிவு, விவசாயம் குறித்த நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை அளிப்பதன் மூலம் வேளாண் தொழிலை நிலையான லாபம் மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.
அதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன. அந்த நிறுவனங்கள் வளர்ச்சியின் இயந்திரமாக மாறுவதற்கு வங்கிகள் உதவ வேண்டும். பிரதமரின் சாலையோர வியாபாரிகள் நலத்திட்டம் மூலம் அவர்களின் நிதிஆதாரம் மேம்பட்டுள்ளது. 2030 மார்ச் மாதம் வரை இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை போல் அல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கி சேவைகள் இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு மிகுந்த பலனளிக்கிறது. நமது வங்கிகள் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்திய அட்டவணை வர்த்தக வங்கிகள், தங்களின் சொத்து தரத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நீண்டகால கடன் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் பணவீக்க விகிதம் குறைந்து, கடந்த ஜூலையில் 1.55 சதவீதத்தை எட்டியுள்ளது. வருங்கால வைப்பு நிதியகம்(EPFO) ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 22 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளது.
மக்களின் வாங்கும் திறன் உயர்வு: இதுதவிர, பொதுமக்களின் வாங்கும் திறன் 17 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இந்தியாவின் நிதிநிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வருவாய் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும், தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி அறிவிப்புகள் வெளியாகும். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்றும், நாளையும் (செப். 3, 4) நடைபெற உள்ளது. அதனடிப்படையில் மக்களுக்கு நேரடியாக கூடுதல் சலுகைகள் கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி, அலுவல்சாரா தலைவர் ஜி.மகாலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக 2 நாள் தமிழக சுற்றுப்பயணத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னைக்கு நேற்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தாமோ அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.