சென்னை: சிஎன்ஜி பேருந்துகள் மூலம் ரூ.92.04 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) என்னும் வாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளை கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இத்தகைய பேருந்து மூலம் போக்குவரத்துத் துறையின் செலவுகள் குறைந்தன. தொடர்ந்து சிஎன்ஜி பேருந்துகளின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்த்தப்பட்டன. இந்நிலையில், சிஎன்ஜி பேருந்துகளால் ஏற்படும் சேமிப்பு குறித்து போக்குவரத்துத் துறை சில விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: கடந்த மாதம் வரை 38 பேருந்துகள் சிஎன்ஜியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. நடப்பாண்டு ஜூன் மாதம் வரை டீசல் பேருந்துகளை ஒப்பிடும் போது சிஎன்ஜி பேருந்துகளால் கி.மீ-க்கு ரூ.3.94 சேமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 மாதங்களில் ரூ.92.04 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடிகிறது என்று போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது.