கோவை: ஒடிசா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கவர்ச்சிகர சலுகைகளால் பல்வேறு ஜவுளித் தொழில் நிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது என, மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘இந்த தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது: “நடப்பாண்டு மதிப்பீடுகளின்படி தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2024-2025ம் ஆண்டு 9.69 சதவீதம். தனிநபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.1,96,309 என இரண்டாம் இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியை (ரூ.1,14,710) விட அதிகம். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 9.7% வளர்ச்சி விகிதத்தை சராசரியாக நடைமுறைப்படுத்தினால் கூட 2032-2033-ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி விடுவோம்.
சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தளவாட வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தமிழ்நாடு பெருமளவில் முதலீடு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலம். அதேசமயம் தொழிலாளர்கள் பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகவும் உள்ளது.
50 சதவீதத்திற்கு மேல் வட மாநில தொழிலாளர்களை சார்ந்து உள்ளதால், அவர்கள் நமது மாநிலத்தில் பல்வேறு துறைகளில் தகுந்த பயிற்சிகளை பெற்று வருகின்றனர். தற்போது அவர்கள் மாநிலங்களிலேயே தொழில் தொடங்க பல்வேறு மானியங்களை அள்ளித் தருவதால் தொழில் வளர்ச்சி அடைவதுடன், நமக்கு இதுவரை மூலப் பொருட்களையும் தொழிலாளர்களையும் வழங்கிவந்த மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் அங்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக போட்டி மாநிலங்களுக்கு இணையான தொழில் கொள்கை வகுக்காதது, தொடர்ந்து 4 ஆண்டு காலமாக மின் கட்டணம் உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் போட்டியிட இயலாத நிலை உருவாகி வருகிறது. தொழில்துறையினரின் தேவையை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்க முன்னுரிமை வழங்கினால் வருவாய் அதிகரித்து அதன் மூலம் அரசின் நிதி பற்றாக்குறையை சீர் செய்ய முடியும்.
மாறாக இலவசம் மற்றும் மானியங்களுக்காக அனைத்து இடங்களிலும் வரிகள் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியும் மறுபுறம் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி கடன் பெற்று மாநிலத்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது கடன் சுமை ரூ.9 லட்சம் கோடியை கடந்துள்ளது. நாட்டிலேயே கடன் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
புதிதாக உற்பத்தி துறைக்கு வருபவர்களை விட சேவை துறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை அறிவித்தாலும் ஏற்கெனவே வளர்ந்த மாநிலமான தமிழக தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிய வளர்ச்சிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, தமிழக அரசு தொழில்துறையினர் நலன் காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
ரூ.7,808 கோடி முதலீடுகள்: கடந்த ஜூலை 25-ம் தேதி ஒடிசா மாநில அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த நிறுவனங்களுடன் மொத்தம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் ரூ.7,808 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. புதிதாக 53,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநில அரசு நடத்திய ‘ஒடிசா டெக்ஸ் 25’ கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள (கோவை, திருப்பூரை சேர்ந்த பிரபல ஜவுளி நிறுவனங்கள் உள்பட) 160 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.