கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10 ஆக குறைந்திருந்த முருங்கைக்காய், பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. தற்போது மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளான கருணைக் கிழங்கு ரூ.40, கேரட் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.30, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.25, சாம்பார் வெங்காயம் ரூ.20, உருளைக் கிழங்கு, கத்தரிக் காய், அவரைக் காய், புடலங்காய் தலா ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.14, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, வரத்து குறைவால் விலை உயர்ந்திருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் முருங்கைக்காய் உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் 5 ஆயிரத்து 625 ஹெக்டேர் பரப்புடன் முதலிடத்திலும், 3 ஆயிரத்து 247 ஹெக்டேர் பரப்புடன் கரூர் மாவட்டம் 2-வது இடத்திலும், 2 ஆயிரத்து 822 ஹெக்டேர் பரப்புடன் தேனி மாவட்டம் 3-ம் இடத்திலும் உள்ளன. ஜூன் – செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவக் காற்று காலத்தில் பலத்த காற்று வீசுவதால் அதிக அளவில் முருங்கை பயிரில் பூக்கள் உதிரும். அதனால் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்துவிடுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.