பெங்களூரு: இந்தியர்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்டுதலுக்குரியது என்று ஜப்பான் ஸ்டார்ட்அப் மைக்ரோபைனான்ஸ் ஹக்கி நிறுவனத்தின் நிறுவனர் ரெய்ஜி கோபயாஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு கார் வாங்குவதற்கான நிதி உதவியை ஹக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் எங்கள் நிறுவனம் கென்யா, தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கால்பதித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் பெங்களூருவில் ஹக்கி நிறுவனம் செயல்பட தொடங்கியது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் எனர்ஜியை மிகவும் விரும்புகிறேன். அவர்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். இது, ஜப்பானிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் ஜப்பானில் வயதானவர்கள் அதிகம் என்பதால் அவர்கள் எல்லாவற்றிலும் நிதானமாகவும், முன்னெச்சரிக்கை உணர்வுடன் மட்டுமே செயல்பட விரும்புகின்றனர். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. ஆனால், இந்தியாவில் அதற்கு நேர்மாறு.
குறிப்பாக, இந்தியர்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மிகவும் எனர்ஜியுடன் பணியாற்றுவதை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது மிகவும் என்னை ஈர்த்துள்ளது. ஏனெனில் ஜப்பான் பணி கலச்சாரத்துக்கும், இந்திய பணி கலாச்சாரத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் முதலீட்டாளர்கள் விரைவாக முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். அனைவரிடமும் நட்புறவுடன் செயல்படுகின்றனர். இவ்வாறு கோபயாஷி தெரிவித்துள்ளார்.