சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் மாலையில் ரூ.70 உயர்ந்தது. அதன்படி தற்போது, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை சற்றே குறைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் முழுமைக்கும் கூட நீடிக்காமல் மாலையிலேயே கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,000-ஐ நெருங்கியுள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளி ஒரு கிராம் ரூ.163-க்கு விற்பனையாகிறது.