புதுடெல்லி: கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா, இறக்குமதி செய்துள்ளதால் சுமார் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடங்கியதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
அதேநேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது, ஏனெனில் அது அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளாதார ரீதியில் உதவுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த எரிசக்தி பாதுகாப்பையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 39 மாதங்களாக இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதால் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முன்வராவிட்டால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்திருக்கும்.
மேலும், இது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கான செலவையும் பல மடங்கு உயர்த்தியிருக்கும். இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாக நம்பியிருப்பதால் மத்திய அரசுக்கு அதனால் அதிக செலவு ஏற்பட்டிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விஷயத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதும், குறைந்த விலை கச்சா எண்ணெய் காரணமாக இந்தியா அதற்கு அடிபணியவில்லை என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுக்கு கீழ்படியத் தேவையில்லை என்பதும், எந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என்பதில் தெளிவான கொள்கையையும் இந்தியா பின்பற்றி வருவதாக அந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.