காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) காவிரி அசட் நிர்வாக அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், ஓஎன்ஜிசி செயல் இயக்குநரும், காவிரி அசட் மேலாளருமான உதய்பாஸ்வான் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவலர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 700 டன் என்ற நிலையில் இருந்து 600 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தால் பராமரிப்புப் பணிகளைக்கூடமேற்கொள்ள முடியவில்லை. டெல்டா அல்லாத மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக துரப்பண பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
அதனால் துரப்பண பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
நிலக்கரிக்கு மாற்றாக இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தி செய்ய முடியும். இது சுற்றுச்சூழலை பாதிக்காது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பசுமை எரிசக்தி என்று சொல்லக் கூடிய சூரிய சக்தி, காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஓஎன்ஜிசி முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.