சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.81,920-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 6-ம் தேதி ஒருகிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. 7-ம் தேதியும் ரூ.10,005 என்ற விலையே நீடித்தது. 8-ம் தேதி ரூ.10,060 ஆகவும், 9, 10, 11-ம் தேதிகளில் ரூ.10,150 ஆகவும் உயர்ந்தது. ஒரு பவுன் விலை ரூ.81,200 ஆக இருந்தது.
இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.90 என பவுனுக்கு ரூ.720 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.10,240 ஆகவும், ஒரு பவுன் ரூ.81,920 ஆகவும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,170, ஒரு பவுன் ரூ.89,360 என இருந்தது. பவுன் விலை கடந்த 1-ம் தேதி ரூ.77,640 ஆக இருந்த நிலையில், நேற்று வரை ரூ.4,280 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்ந்தது: இதேபோல, வெள்ளி விலையும் கடந்த 9, 10, 11-ம் தேதிகளில் மாற்றமின்றி இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ரூ.142 என்ற வரலாறு காணாத உயர்வை தொட்டது. இதனால் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ரூ.1.42 லட்சத்துக்கு விற்பனையானது.
இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘அமெரிக்க பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மேலும், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி உள்ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தங்கம் விலை உயரும்போது வெள்ளி விலையும் உயர்வது வழக்கமானதுதான். தற்போது தொழில் துறை உள்ளிட்டவற்றில் வெள்ளியின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளியும் வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது. வரும் நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.250-ஐ அடையக் கூடும்’’ என்று தெரிவித்தார்.