கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜெர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நல்ல மண்வளம் மற்றும் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், மலர் மற்றும் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஜெர்ரி பழம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் ஜெர்ரி பழங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பழத்துக்கு வர்த்தக வரவேற்பு உள்ளதால், இப்பகுதியில் கூடுதல் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: நன்கு வடிகால் வசதியுள்ள நிலங்களில் ஜெர்ரி பழம் சாகுபடியில் ஈடுபட்டோம். நல்ல மகசூல் கிடைத்தது. மேலும், சந்தை வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனால், தேன்னிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக விவசாயிகள் ஜெர்ரி கன்றுகளை நடுவு செய்து வருகின்றனர். ஜெர்ரி பழத்தில் 10 ரகங்கள் உள்ளன. ஊட்டியில் விளையும் ஜெர்ரி ரக பழத்தை ஓசூர் பகுதியில் நடவு செய்துள்ளோம்.
நன்கு பராமரித்து வந்தால் ஒன்றரை ஆண்டு முதல் அறுவடைக்குப் பழம் கிடைக்கும். ஒரு மரத்தில் 5 முதல் 8 கிலோ வரை, ஆண்டுக்கு 2 முறை மகசூல் கிடைக்கும். இப்பழங்களை 3 தரமாகப் பிரித்துப் பதப்படுத்தி முதல் தரம் பழங்கள் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம். இப்பழத்தில் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், ஒயின் தயாரிக்க வியாபாரிகள் கொள்முதல் செய்து கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பு வருகின்றனர்.
2-ம் தரம் பழங்கள் ஜாம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பேக்கரிகளுக்கு அனுப்பி வருகிறோம். நல்ல மகசூல், சந்தை வாய்ப்புள்ளதால், இச்சாகுபடி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.