புதுடெல்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதில் குஜராத்தை சேர்ந்த நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த நயாரா, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் ஐரோப்பிய எரிசக்தி சந்தையில் இருந்து இரு நிறுவனங்களும் வெளியேற்றப்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எரிசக்தி தேவைக்கு இந்தியா முதலிடம் அளிக்கிறது. நாட்டின் பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். ஐரோப்பிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கக்கூடாது. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளோம்.
பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதேநேரம் இதர நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஐரோப்பிய நாடுகள் சமநிலையுடன் செயல்பட வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.