ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ஏதர் ‘இஎல்01’ மின்சார ஸ்கூட்டர், ஏதர் ‘ரெடெக்ஸ்’ (மோட்டோ வகை) மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்த ஆண்டு சந்தைப்படுத்துவதற்கான பணிகளில் ஏதர் எனர்ஜி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஏதர் எனர்ஜி நிறுவனம். இந்நிறுவனம், பல்வேறு முன்னணி மின்சார இருசக்கர வாகன நிறுவனங்களுடன் போட்டியிட்டு தங்களுடைய 450 சீரிஸ், ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஏதர் மின்சார ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களுக்கான மூன்றாவது வருடாந்திர ‘ஏதர் சமூக தினம் 2025’ பெங்களூருவில் ஆக.30-ம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏதர் மின்சார ஸ்கூட்டர் பயனாளர்கள், இருசக்கர வாகன ஆர்வலர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ‘ஏதர் 450’ தொடருக்குப் பிறகு ஏதரின் முதல் புதிய வாகனக் கட்டமைப்பு மற்றும் அடுத்த தலைமுறை மின்சார ஸ்கூட்டர்களுக்கான புதிய ‘இஎல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்குதளத்தை’ ஏதர் சமூக தினத்தில் அந்நிறுவனம் வெளியிட்டது. அந்தவகையில், ‘இஎல் இயங்குதளம்’ மூலம் தயாரிக்கப்பட்ட முதல் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராக ‘ஏதர் இஎல்01’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், முழு எல்இடி விளக்குகள், இருக்கைக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்டுகள் வைக்கும் வகையில் இடைவெளி, பெரிய தொடுதிரை பலகை, 14 இன்ச் சக்கரங்கள், மேலும், காப்புரிமை பெற்ற ஏசி – டிசி தொகுதி ஆகியவற்றை ஏதர் இஎல்01 ஸ்கூட்டர் கொண்டுள்ளது. மேலும், இது பராமரிப்பு செலவையும் குறைக்கும் என ஏதர் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
அதோடு, ‘ரெடெக்ஸ்’ என்ற எதிர்காலத்தின் மோட்டோ ஸ்கூட்டரையும் ஏதர் சமூக தினத்தில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மற்ற நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களின் விலையை ஒப்பிடும்போது, ஏதர் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதர் இஎல்01 ஸ்கூட்டர் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் சந்தைப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்த ஸ்கூட்டர்கள் மக்களின் பார்வைக்காக மட்டுமே அறிமுகம் செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தும் போது, அதற்கான விலை பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஏதர் ரிஸ்டா மின்சார ஸ்கூட்டரில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை புதுப்பித்து ஏதர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக, மோசமான சாலை பகுதியில் ஸ்கூட்டரை இயக்கும் போது பள்ளங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிப்பது, விபத்து எச்சரிக்கை, திருட்டில் இருந்து பாதுகாப்பது, க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் தொடுதிரை செயல்பாடு என ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் முயற்சியாக ரிஸ்டா மின்சார ஸ்கூட்டரின் செயல்பாடுகளை புதுப்பித்துள்ளது.
இந்நிலையில், ‘இஎல் இயங்குதளம்’ உற்பத்தி செலவுகளை குறைப்பதாகவும், புதுமையான தயாரிப்புகளுக்கு வழிவகுப்பதாகவும், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா தெரிவித்தார். இது
குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இஎல் இயங்குதளத்துடன், ஏதரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நாங்கள் அடித்தளம் அமைக்கிறோம். ‘ஏதர் 450’ சீரிஸ் எங்களது முதல் அத்தியாத்தை வரையறுத்தது போல, ‘இஎல்’ எங்களுக்கு பல வகை அளவுகளில், குறைந்த விலையில் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்க உதவுகிறது. மேக்ஸி ஸ்கூட்டர் முதல் ஃபேமிலி ஸ்கூட்டர் வரை பல்வேறு வகையான ஸ்கூட்டர்களை உருவாக்கும் வகையில் இந்த ‘இஎல் இயங்குதளம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்த ‘இஎல் இயங்குதளம்’ மூலம் தயாரிக்கபட்ட முதல் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராக ‘ஏதர் இஎல்01’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏதர் 450, ரிஸ்டா சீரிஸில் பயன்படுத்தப்படும் தற்போதைய தளத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அடுத்த ஆண்டுக்குள் இதனை சந்தைப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
அதேபோல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏதர் ஸ்கூட்டர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை புதுப்பித்துள்ளோம். அந்த வகையில், ஸ்கூட்டரை யாரேனும் இடித்தாலோ, கீழே விழுந்தாலோ, அந்த ஸ்கூட்டரின் உரிமையாளரின் செல்போனுக்கு அலெர்ட் சென்றுவிடும். மேலும், ஏதர் அதிவேக சார்ஜிங், ஹலோ மற்றும் குழந்தைகள் ஹெல்மெட், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறோம் என்றார்.