புதுடெல்லி: சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
‘எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’ வெளியாகி உள்ளது. இதில், ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 1,687 பேர் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 284 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர். இதில் 148 பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31) முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும். மேலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.8,900 கோடி) சொத்து வைத்துள்ள 350 இந்தியரில் இளையவர் (இளம் பில்லியனர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ், தகவல் தொடர்பு முறையை வேகமாக மாற்றி வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
முகேஷ் அம்பானி முதலிடம்: இந்தப் பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (68), ரூ.9.55 லட்சம் கோடி சொத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.8.14 லட்சம் கோடியுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். எச்சிஎல் நிறுவனத்தின் ரோஷினி நாடார் ரூ.2.84 லட்சம் கோடி சொத்துடன் முதல் முறையாக 3-ம் இடம் பிடித்துள்ளார். சைரஸ் புனாவல்லா (ரூ.2.46 லட்சம் கோடி) 4-ம் இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா (ரூ.2.32 லட்சம் கோடி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடி ஆகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் 50% ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக, சராசரியாக வாரந்தோறும் ஒருவர் புதிய பில்லியனர் பட்டியலில் இணைந்து வருகின்றனர் என ஹுருன் தெரிவித்துள்ளது.