கோவை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் 25 லட்சம் பிற மாநில தொழிலாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், மேற்கு வங்க முதல்வரின் சலுகை அறிவிப்பால் தொழில் துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், அடிப்படைப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனால், ஒடிசா, உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தொடக்கத்தில் கட்டுமானம், நூற்பாலை, மருத்துவமனை, ஓட்டல் போன்ற துறைகளில் மட்டும் பிற மாநில தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது சரக்கு வாகனம் ஓட்டுதல், தூய்மைப் பணி, விவசாயப் பணி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.
அண்மையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வேலை வாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் மீண்டும் ஊர் திரும்பினால், ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியுள்ள தமிழக தொழில் துறையினரை கலக்கமடையச் செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் 50 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் கட்டுமானத் தொழிலில் மட்டுமே பலர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளின் கீழ் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொழிலைக் கற்றுக்கொடுத்து, தங்குமிடம் கொடுத்து, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளுடன் தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் மேற்குவங்க மாநிலத்துக்கு திரும்பினால் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொழில்முனைவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வட மாநிலங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள்தான். இவர்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ரூ.600 தினசரி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், அதில் ரூ.30 வரை ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொள்வார்கள். தொழில் துறையினரிடமும் கமிஷன், தொழிலாளர்களிடமும் கமிஷன் பெற்று வருகின்றனர்.
தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூறுவதைவிட, தங்களை பணிக்கு சேர்த்துவிட்ட ஒப்பந்ததாரர்கள் கூறுவதைத்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் கேட்டு நடப்பார்கள். தமிழகத்தில் உள்ள வடமாநில ஒப்பந்ததாரர் ஒருவர் மாதம் ரூ.12 லட்சம் கமிஷன் தொகையை பெற்று வருகிறார். பணத்தை வழங்கி தொழிலாளர்களை அழைத்து வர வேண்டும் என்று கூறினால், 500, 1,000 தொழிலாளர்களை பணிக்கு அனுப்பிவைக்கும் திறன் கொண்டுள்ளார்.
இத்தகைய ஒப்பந்ததாரர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மேற்குவங்க முதல்வர் போன்றவர்கள் தொடர்ந்து சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.