புதுடெல்லி: நாட்டில் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டில் எரிபொருளில் 20% எத்தனால் கலப்பதற்கு இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பே இலக்கை நிர்ணயித்தது. இது E20 என அழைக்கப்படுகிறது.
ஆனால் இது வாகன செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பில், குறிப்பாக பழைய வாகனங்களில் அதன் தாக்கம் குறித்து ஓட்டுநர்களிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) நிர்வாக இயக்குநர் பி.கே.பானர்ஜி தெரிவித்துள்ளதாவது: பழைய வாகனங்களில் E20 எரிபொருளைப் பயன்படுத்துவது மைலேஜை குறைக்கிறது. ஆனால் அது ஆபத்து அல்ல. பாதுகாப்பானது. இப்போது மில்லியன் கணக்கான வாகனங்கள் E20 எரிபொருளில் நீண்ட காலமாக இயங்கி வருகின்றன.
அதனால் ஒரு வாகனத்தில் கூட பழுதடைதல் அல்லது இயந்திர செயலிழப்பு பதிவாகவில்லை. சிக்கல்கள் ஏற்பட்டால், உத்தரவாதம் மற்றும் காப்பீட்டு கோரிக்கைகள் அடிப்படையில் நிறுவனங்களால் முழுமையான தீர்வு காணப்படும். இவ்வாறு பானர்ஜி தெரிவித்தார்.