பெங்களூரு: எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பரில் வெளியிட்டார். அதில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) அறிவிப்பு வெளியிட்டார்.
ஏற்கெனவே 2,000 டாலர் என்பதிலிருந்து 5 ஆயிரம் டாலராக கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப் தற்போது பன்மடங்கு உயர்த்தியது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்தது.
இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையில் இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ, தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்ட உயர்நிலை வேலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.
இது, உலகளாவிய திறன் மையங்களின் (ஜிசிசி) வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 8% பங்களிப்பை 283 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட ஐடி துறை வழங்குகிறது. ட்ரம்பின் இந்த முடிவு இந்த துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஜிசிசி சேவைகளுக்கு அதிகரித்து வரும் தேவை அதனை குறைக்க உதவும் என்று இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.