சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி அதன் சமூகப் பொறுப்புணர்வு அமைப்பான (சிஎஸ்ஆர்) பரிவர்தன் மூலம் தமிழகத்தில் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கியின் சிஎஸ்ஆர் பிரிவின் தலைவர் நுஸ்ரத் பதான் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை எச்டிஎப்சி வங்கியின் பரிவர்தன் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் பல்வேறு சமூக நல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது முதல் கல்வி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு என அனைத்தையும் வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் வாரியாக பிரத்யேக நடவடிக்கையை எடுத்துள்ளோம். இதன் மூலம் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம்.
28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் சமூக பொறுப்பு திட்டங்களுக்காக ரூ.6,173 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. எங்களுடன் 150 என்ஜிஓக்கள் கைகோத்துள்ளனர்.
கடந்த மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் சிஎஸ்ஆர் செலவினத்தில் இந்தியாவில் எச்டிஎப்சி வங்கி முன்னிலையில் உள்ளது. அந்த நிதியாண்டில் ரூ.1,068 கோடியை நாடுமுழுவதும் பரிவர்தன் திட்டத்தின் கீழ் சமூக நல திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.