பாஸ்ட்ராப்: எக்ஸ் சமூக வலைதளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி இருந்தார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதோடு பல்வேறு அதிரடி மாற்றங்களை எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகம் செய்தார். பயனர்களுக்கு நீல குறியீட்டை (ப்ளூ டிக்) கட்டண அடிப்படையில் வழங்குவதும் அவரது முடிவுகளில் ஒன்று.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை மஸ்க் நியமித்தார். லிண்டா, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அதன் அடிப்படையில் இந்த பொறுப்பை மஸ்க் அவருக்கு வழங்கி இருந்தார். இந்தப் பணியை அவரும் ஆவலுடன் ஏற்றார்.
“இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த பொறுப்பை என்னிடம் எலான் மஸ்க் ஒப்படைத்தது வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இது குறித்து நாங்கள் முதல் முறையாக பேசியபோது எக்ஸ் தளம் குறித்த தனது தொலைநோக்கு பார்வை என்ன என்பதை மஸ்க் விவரித்தார். இந்த பணியை தொடங்கிய போது பயனர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், நிறுவனத்தின் மாற்றம் குறித்து பேசி இருந்தோம்.
கம்யூனிட்டி நோட்ஸ் மாதிரியான முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளோம். எக்ஸ் ஏஐ, எக்ஸ் மணி போன்றவை விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும். பயனர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என லிண்டா கூறியுள்ளார்.
அவருக்கு மாற்றாக அடுத்த சிஇஓ யார் என்பதை இன்னும் எக்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. ‘தங்கள் பங்களிப்புக்கு நன்றி’ என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.