புதுடெல்லி: பொருளாதார சுயநலம் காரணமாக பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா-2025 மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சில நாட்களுக்கு முன்பாகத்தான் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை இந்தியா ஒவ்வொரு எதிர்பார்ப்பையும், ஒவ்வொரு மதிப்பீட்டையும் விஞ்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. பொருளாதார சுயநலத்தால் உருவாக்கப்பட்ட சவால்கள் காரணமாக உலக பொருளாதாரங்கள் ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிச்சயமற்ற சூழ்நிலையிலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகம் நீடித்தால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான கனவு விரைவில் நிறைவேறும்.
20-ம் நூற்றாண்டைப் பொருத்தவரையில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வளம்தான் அசைக்க முடியா சக்தியாக இருந்து அதனை வடிவமைத்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டின் உண்மையான சக்தி செமிகண்டக்டர்கள் தான்.
கடந்த நூற்றாண்டில் உலகின் தலைவிதி எண்ணெய் கிணறுகளுடன் பிணைக்கப்பட்டிருந்தது. தற்போதைய நூற்றாண்டின் தலைவிதி என்பது சிறிய சிப்பில் குவிந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் உலகின் முன்னேற்றத்தை வேகமாக இயக்கும் வலிமை அதில் பொதிந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப் ஒரு நாள் உலகின் மிகப்பெரிய மாற்றத்துக்கான சக்தியை அளிக்கும்.
நாம் தாமதமாகத் தொடங்கினாலும் இப்போது நம்மை எதுவும் தடுக்க முடியாது என்பதே உண்மை. இந்தியாவை உலகம் தற்போது மதிக்கிறது, நம்புகிறது. இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விக்ரம்-32 சிப்: செமிகான் இந்தியா மாநாட்டின் நேற்றைய தொடக்க விழாவின்போது முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விக்ரம்-32 பிட் சிப்பை பிரதமர் மோடியிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.
அப்போது, “எண்ணெய் கருப்பு தங்கம் என்றால், செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
விக்ரம்-32 சிப் விண்வெளிப் பயணங்களுக்காக முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 32-பிட் மைக்ரோபிராசசர் ஆகும். இது ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி சூழல்களின் தீவிர தன்மைகளை தாங்கும் வகையில் சண்டிகரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) செமிகண்டக்டர் ஆய்வகத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டது.