சென்னை: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தினார்.
அமெரிக்க டெக் நிறுவன செல்வந்தரான லேரி எலிசனின் சொத்து மதிப்பு அதிகரிக்க காரணம் ஆரக்கிள் நிறுவன சொத்து மதிப்புகள் சந்தை கூடியதுதான். அதில் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் எலிசன்.
81 வயதான எலிசனின் சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் 384 பில்லியன் டாலர்களை கொண்டுள்ள மஸ்க்கை அவர் முந்தியுள்ளார். இதை ப்ளூம்பெர்க் உறுதி செய்துள்ளது. தற்போது எலிசன் மற்றும் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் மஸ்க் உடனான உறவு பலருக்கு கசப்பை கொடுத்துள்ளது. இருப்பினும் லேரி எலிசனுடன் நட்பு பாராட்டி வருகிறார் மஸ்க். எலிசனை தனது வழிகாட்டியாக மஸ்க் குறிப்பிடுவது உண்டு. டெஸ்லா, இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர், ஹவாயில் ஒரு தீவு என எலிசனின் தொழில்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 101 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.