கோவை: உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்களால், கோவையில் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதில், குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் வாழைத்தார் ஏல மையத்துக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு, அங்கு குவியும் உள்ளூர் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநில மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிட்டு இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆனால், கடந்த மாதம் வீசிய கடுமையான சூறைக்காற்றால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால், வழக்கமாக ஓணம் பண்டிகை காலங்களில் வாழைத்தாருக்கு விலை கிடைக்கவில்லை. கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. நேந்திரன் வாழைத்தார் ஓணம் பண்டிகை காலத்தில் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகும். இந்நிலையில், தற்போது கிலோ ரூ.30 வரை ஏலம் போனது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக வாழை விவசாயிகள் கூறும்போது, ‘‘வழக்கமாக ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டு கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் இல்லாததால் நேந்திரன் வாழையின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகும் நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்’’ என்றனர்.