திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பரவலாக சம்பா நடவு செய்து 15 நாட்களான நிலையில், அடி உரமிட வேண்டியிருப்பதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு தனியார் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஒரு மூட்டை யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் உரக் கடைகளில் ரூ.320-க்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும், ரூ.700 மதிப்பிலான கூடுதல் இணைப் பொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா கொடுப்பதாகவும் தனியார் உரக் கடை மீது விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி கானூர் அழகர்ராஜ் கூறியது: பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு இடையே சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உரங்களை விலையேற்றம் செய்தும், இணைப் பொருட்களை சேர்த்து வாங்க வேண்டும் எனவும் தனியார் உரக் கடைகள் நெருக்கடி அளிப்பதால், விவசாயிகள் மேலும் பாதிப்படைகின்றனர்.
எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் 12,900 ஏக்கர் பரப்பளவில் சம்பா நடவு பணி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தின் யூரியா தேவை 7,770 டன் ஆகும். இதில், 5,155 டன் யூரியா வரப்பெற்று, அரசு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளது. இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 727 டன் யூரியா உள்ளது.
உரத்தை நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக விற்கும் உரக் கடைகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் கடைகளில் இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்திக்கப்படுவதை தனியார் கடைகள் நிறுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சம்பந்தபட்ட உர நிறுவனங்களும் தனியார் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.