குருகிராம்: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது. இது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு சற்று அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தங்களது போனில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வது வழக்கம். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றிக் கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
இந்தச் சூழலில் சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தி உள்ளது. அந்த வகையில் தற்போது சொமேட்டோவில் ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்கள் ரூ.12-ஐ பிளாட்ஃபார்ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அண்மையில் ஸ்விகி நிறுவனம் இந்த பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. ரூ.14 என வாடிக்கையாளர்களிடம் பிளாட்பாரம் கட்டணம் வசூலித்து வருகிறது ஸ்விகி.
கடந்த சில ஆண்டுகளாக பிளாட்பார்ம் கட்டணத்தை ஸ்விகி மற்றும் சொமேட்டோ வசூலிக்க தொடங்கின. எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்விகி மற்றும் சொமேட்டோ என இரண்டு உணவு டெலிவரியின் நிறுவனங்களும் நிதி சார்ந்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. லாபம் குறைவது, இழப்பு, குயிக் காமர்ஸ் சார்ந்த முதலீடு மற்றும் போட்டி நிறுவனங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் போட்டி நிறுவனங்கள் சில உணவக உரிமையாளர்களுக்கு குறைந்த கமிஷன் விகித அடிப்படையில் இயங்கி வருவதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.