புதுடெல்லி: லைப் பாய், பியர்ஸ், டவ், லக்ஸ், பாண்ட்ஸ், குளோஸ் அப், பெப்சோடென்ட், சர்ப் எக்செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்ட் தேநீர், அழகு சாதனங்கள் உட்பட பல்வேறு நுகர்வோர் பொருட்களை இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ரோஹித் ஜாவா பதவி வகிக்கிறார். இவர் வரும் 31-ம் தேதியுடன் அப்பதவியில் இருந்து விலகுகிறார். இதையடுத்து பிரியா நாயரை அந்தப் பதவிகளுக்கு இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் முதல் பெண் எம்.டி, சிஇஓ என்ற பெருமையை பிரியா நாயர் பெறுகிறார்.
அத்துடன் நிறுவனத்தின் போர்டு, தலைமை நிர்வாக உறுப்பினராகவும் இனிமேல் இருப்பார். தற்போது பிரியா நாயர் வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பணிகளின் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் பொறுப்புகளை வகித்து வருகிறார்.
இதுகுறித்து இந்துஸ்தான் யுனிலீவர் தலைவர் நிதின் பரன்ஜிபே கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்தில் பிரியா நாயர் மிகப்பெரிய பணிகளை செய்துள்ளார். இந்திய சந்தை பற்றி பிரியா நாயரின் மிகப்பெரிய புரிதல் உள்ளது. அவர் தொடர்ந்து அளித்து வரும் பங்களிப்புகள், நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்’’ என்றார். மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூரில் பிறந்தவர் பிரியா நாயர். இவரது பெற்றோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.