புதுடெல்லி: இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ட்ரம்ப்பின் வரி விதிப்பால், சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.
இதையடுத்து, இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத் துறை துணை பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லி வந்தனர். இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கான இந்திய பிரதிநிதியும், மத்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினரை லிஞ்ச் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது. இருதரப்பும் ஏற்கக்கூடிய வகையில் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக குழு வட்டாரங்கள் தரப்பில், “இந்திய குழுவினர் உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்தது. இரு நாடுகள் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். வரும் நவம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும். தற்போது இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைக்காக கடந்த மே மாதம் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இம்முறையும் அவர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் (செப். 18) ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகள் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.