கோவை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகளுக்குள் 5 சதவீத கூடுதல் சந்தையை இந்தியா பிடிக்கும் என ஜவுளித்தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: இங்கிலாந்து நாட்டுக்கான ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி தொழிலில் வங்கதேசம், பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வரியில்லா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் இந்திய ஜவுளித்தொழில் நிறுவனங்களின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
இங்கிலாந்தின் மொத்த ஜவுளி ஏற்றுமதி (26.95 பில்லியன் டாலர்), இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை(36.71 பில்லியன் டாலர்), விட குறைவு என்ற போதும், இங்கிலாந்திற்கு இந்தியா 1.79 பில்லியன் டாலர் மதிப்பிலான மிக குறைந்த அளவில் மட்டுமே ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது இந்தியா- இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் எதிர்வரும் நாட்களில் இந்திய ஜவுளித்தொழில் குறிப்பாக ஆயத்த ஆடைகள், சமைல் அறை ஜவுளிப்பொருட்கள், தரைவிரிப்புகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்டவை மிகச் சிறப்பான வளர்ச்சியை பெறும். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தில், கூடுதலாக 5 சதவீத சந்தையை இந்தியா பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) தலைவர் டாக்டர். சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 100-வது சுதந்திர தின ஆண்டான 2047-ம் ஆண்டில் பாரதத்தை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை நிர்ணயித்து பாரத பிரதமர், நரேந்திர மோடி பல்வேறு புரட்சிகரமான கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறார். ஜூலை 24-ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்தியா-இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வரும் ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
மத்திய அரசு தற்போதுள்ள ஆண்டு ஜவுளி வர்த்தகமான 172 பில்லியன் அமெரிக்க டாலரை 2047-ம் ஆண்டிற்க்குள், 2040 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ஆண்டு ஜவுளி ஏற்றுமதியை 37 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 600 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கை நிர்ணயித்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நாகரீகம், மின் வணிகம், மாறி வரும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் இந்தியாவின் நம்பகத்தனமான வர்த்தகம் போன்றவை இலக்கை அடைய சாதகமாக உள்ளது. போட்டி நாடுகளில் நிலவி வரும், பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நிபந்தனைகள், இந்தியாவின் ஜவுளித்துறை வேகமாக வளர்ச்சியடைய பல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இந்திய ஜவுளிப் பொருட்கள் மீது விதிக்கப்படும் 4 முதல் 36 சதவீத வரிகளால் இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு வரியில்லா மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுடன் கடந்த சில ஆண்டுகளால போர்கால அடிப்படையில் கலந்து பேசி கையெழுத்திட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்தானதால், இந்நாடுகள் உடனான வர்த்தகம் வெகுவாக முன்னேறியுள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தமிடுவது மிக முக்கியமென கருதி, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டுடன் விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியுஷ் கோயல், இங்கிலாந்து தொழில் மற்றும் வர்த்தக செயலர், ஜோனதன் ரெடனால்ட்ஸ் இரு நாட்டின் பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர்.
வரலாற்றுமிக்க சாதனைக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர், பியுஷ் கோயல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர், கிரிராஜ்சிங் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். தற்போது 12 சதவீதம் வரை விதிக்கப்படும் வரிகளிலிருந்து விலக்கு பெற்று இருப்பதற்கு நன்றி.
தற்போது இரு நாடுகளின் 56 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை 2030- ஆண்டிற்க்குள் இரண்டு மடங்காக உயர்த்திட இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஜவுளி ஏற்றுமதி, குறிப்பாக ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். திருப்பூர், கரூர் போன்ற ஜவுளி நகரங்களின் ஏற்றுமதி வெகுவாக உயரும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.