கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அது குறித்து தொழில் அமைப்பினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு அதிக சதகமாக அமைந்துள்ளது. ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள் ஏற்றுமதி, காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயன்தரும்.
குறிப்பாக, இங்கிலாந்தில் உற்பத்தியாகும் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தமிழகம் (கோவை) உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் துறையினருக்கு பணி ஆணைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதி வாய்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தொழில் துறையினருக்கு தமிழக அரசு உதவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறும்போது, “இந்தியா – இங்கிலாந்து இடையிலான புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகப் பாராட்டப்பட்டாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள சமநிலையற்ற தன்மை மற்றும் இந்திய தொழில் துறை மீது ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து தீவிர கவலை எழுகிறது.
இந்தியா தற்போது இங்கிலாந்துடன் வர்த்தக மேல்நிலை (Trade Surplus) கொண்ட நாடாக இருந்தபோதும், இங்கிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது உள்ளூர் எம்எஸ்எம்இ தொழில்முனைவோரின் போட்டித்திறனை பாதிக்கும். மின்சார வாகனங்கள் மீது சுங்க கட்டண குறைக்கப்படுவதால், இந்திய உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனங்கள் சந்தையை இழக்கும் அபாயம் உள்ளது. நூல், காலணி, கடல் உணவுகளுக்காவ சுங்கக் கட்டணம் குறைப்பு வளர்ச்சிக்கு போதுமானது அல்ல.
துறை ரீதியாக தாக்கங்களை கண்காணிக்க ஒரு கூட்டு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை வடிவமைப்பை மறுசீரமைக்க, உள்ளூர் மதிப்பூட்டல் மற்றும் வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்த வேண்டும். அரசு ஒப்பந்தங்களில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மொத்தத்தில் இந்த ஒப்பந்தம் கொண்டாட வேண்டிய ஒன்று அல்ல. எச்சரிக்கையாக பார்க்க வேண்டிய ஒன்று. இந்தியா தனது வர்த்தக உள்நோக்கங்களை மீட்டெடுத்து, எம்எஸ்எம்இ பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தங்களை மறுசீரமைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி கூறும்போது, “வரி இல்லா ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறைக்கு மிக பெரிய ஏற்றுமதி வாய்ப்பாக அமையும். ‘ஓஇ’ மில் நூல்களில் இருந்து உற்பத்தியாகும் ஜவுளி பொருட்களான காடா துணிகள் கரூர் ஜவுளி ரகங்கள் மற்றும் திருப்பூர் பின்னாளடை துணி வகைகள் மிகப் பெரிய ஏற்றுமதி பணி ஆணைகளை பெற உதவும். மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.