புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கு நடுவே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25% வரி விதித்தார். அத்துடன் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.
இதன் மூலம் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தடைபட்டது.
இதுகுறித்து இந்திய வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, “6-வது சுற்று பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை (இன்று) மீண்டும் தொடங்க உள்ளது’’ என்றார். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதிநிதியும் வர்த்தக துறை சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு பங்கேற்கிறது.