சென்னை: இந்தியாவில் வெகு விரைவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகமாக உள்ளது. இந்நிலையில், அதன் இன்டர்நெட் ஸ்பீடு, கட்டணம் உள்ளிட்ட விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை வழங்குவது சார்ந்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து முக்கிய உரிமத்தை பெற்றதாக தகவல் வெளியானது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இருந்த பெரிய தடை நீங்கியது. உரிமம் பெற்றதையடுத்து இந்தியாவில் அந்த நிறுவனம் வணிக நடவடிக்கைகளை தொடங்கியதாக தகவல்.
இந்நிலையில், இந்தியாவில் விநாடிக்கு 25 எம்பிபிஎஸ் முதல் 220 எம்பிபிஎஸ் வேகத்தில் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த அதிவேக இணைய சேவையின் கட்டணம் மாதத்துக்கு ரூ.3,000 முதல் ரூ.4,200 வரையில் இருக்கும் என தகவல். இதோடு ஹார்டுவேர் கிட்களுக்கு ரூ.33,000 வரை பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்படும். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.
ஸ்டார்லிங்க்: அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 130 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்-எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது.
அந்த வகையில் இதன் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.