மும்பை: இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், அதிநவீன மின்சார சொகுசு கார்களை பல நாடுகளில் தயாரித்து வருகிறது. இதுகுறித்து இந்திய ஆட்டோ மொபைல் துறை நிபுணர்கள் கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 35.4 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 5 கோடி வாகனங்கள், கார்கள் ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த கார்களில் 5 சதவீதம் அளவுக்கே மின்சார கார்கள் ஓடுகின்றன. எனவே இந்திய கார் சந்தையில் ஆழமாக கால் பதிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மும்பை, டெல்லியில் டெஸ்லா ஷோரூம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இரு ஷோரூம்கள் மூலம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 2,500-க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்த காரணத்தால் டெஸ்லா கார்களுக்கான முன்பதிவு மந்தமாகவே உள்ளது. இதுவரை 600 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
வரிவிதிப்பு விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா இடையே மோதல் நீடிப்பதால் சீன ஆலையில் இருந்து டெஸ்லா கார்களை இந்தியாவுக்கு அனுப்ப அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு கார்களை அனுப்ப டெஸ்லா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இந்தியாவில் டெஸ்லா ஒய் மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு காரின் குறைந்தபட்ச விலை ரூ.60 லட்சமாக உள்ளது. 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மும்பை, டெல்லி பகுதிக ளில் டெஸ்லா நிறுவனம் சார்பில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.