மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் டெஸ்லாவின் முதல் விற்பனை ஷோரூமை திறந்து வைத்தார். அவர், “டெஸ்லா சரியான மாநிலத்துக்கும், சரியான நகரத்துக்கும் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
மும்பையில் முதல் டெஸ்லா ஷோரூமை திறந்துவைத்து பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “டெஸ்லாவை மும்பைக்கு வரவேற்கிறேன். டெஸ்லா இங்கு தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லா சரியான நகரத்துக்கும், சரியான மாநிலத்துக்கும் வந்துவிட்டது. டெஸ்லா இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் தொடங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்லா இங்கு உதிரிபாகங்கள் மற்றும் சேவை மையத்தையும் நிறுவ உள்ளது. மேலும், நான்கு பெரிய சார்ஜிங் நிலையங்களையும் அமைக்கவுள்ளனர்.
மின்சார வாகனங்கள் இயக்கத்தில் முன்னணியில் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவை டெஸ்லா தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் டெஸ்லா அதன் ஒய் (Y) மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது. வரும் நாட்களில் டெஸ்லா, இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க முடிவு செய்யும்போது மகாராஷ்டிரா அதற்கு விருப்பமான ஒரு இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “டெஸ்லா வெறும் கார் அல்லது கார் நிறுவனம் அல்ல. இந்த நிறுவனம் வடிவமைப்பு, புதுமை மற்றும் தரத்துக்கு ஒரு சான்றாக நிற்கிறது. டெஸ்லா உலகளவில் விரும்பப்படுவதற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிராவில், மின்சார வாகனங்களுக்கான மிகப் பெரிய வலுவான சந்தை உள்ளது. நாங்கள் இப்போது மின்சார வாகனங்களின் மிகப் பெரிய உற்பத்தி மையமாகவும் இருக்கிறோம். ஆனால் டெஸ்லா வரும் நாட்களில் முழு சந்தையையும் மாற்றப் போகிறது என்று நான் நினைக்கிறேன். மும்பை மற்றும் மகாராஷ்டிரா டெஸ்லாவை நன்றாக நடத்தும். எனவே டெஸ்லா தனது பயணத்தின் கூட்டாளியாக எங்களைக் கருத வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
மும்பையில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், டெஸ்லா இந்திய சந்தையில் தனக்கான வரவேற்பு குறித்து பரிசோதிக்கவுள்ளது. மும்பையில் நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் அடுத்தடுத்து பல ஷோரும்களை திறக்கவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது.