மும்பை: இந்தியாவில் டெஸ்லா நிறுவன ஷோரூம் திறப்பு விழா மும்பையில் ஜரூராக நடைபெற்றது. இதன்மூலம் தனது வணிக தடத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் தொடங்கியுள்ளார். ‘ஒய்’ மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின்சார வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக எலான் மஸ்க் இயங்கி வருகிறார். தற்போது சந்தையில் பல்வேறு மாடல் கார்களை டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய விரும்பும். மஸ்க்கும் அப்படித்தான். தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய வணிகத்தை இங்கு நிறுவும் முயற்சியை மேற்கொண்டார். இதில் அவரது டெஸ்லா கனவு இப்போது பலித்துள்ளது.
உலக அளவில் கார் சந்தையை பொறுத்தவரையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் மஸ்க் நிறுவனம் இப்போது டார்க்கெட் செய்துள்ளது. ஸ்டார்லிங்கும் இணைய சேவையை இந்தியாவில் வழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இந்திய வாகன சந்தை நிலவரம்: இந்தியாவில் இப்போதும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தான் டிமாண்ட் அதிகம். ஆனால், வரும் ஆண்டுகளில் இந்த போக்கு மாற்றம் காணும் என்று வணிகத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். வாகன விற்பனை சார்ந்த புள்ளி விவரங்களும், வாகன பயன்பாட்டாளர்களும் மின்சார வாகனத்தின் பக்கம் மெல்ல திரும்பி வருவது இதற்கான தொடக்கப்புள்ளி. இந்தச் சூழலில்தான் டெஸ்லா இந்தியாவில் களம் கண்டுள்ளது.
பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், மஹிந்திரா, டாடா மாதிரியான உள்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார கார் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. இப்போது டெஸ்லா இந்த நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியிட வேண்டி உள்ளது.
டெஸ்லா ‘ஓய்’ மாடல் கார்கள்: இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ‘ஒய்’ மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ‘ஒய்’ லாங் ரேஞ்ச் ஆர்.டபிள்யூ.டி, ‘ஒய்’ ரியர்-வீல் டிரைவ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. இப்போது இதை முன்பதிவு செய்ய முடியும்.
‘ஒய்’ ரியர்-வீல் டிரைவ்: அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காரில் பயணிக்கலாம். 0-ல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டலாம். ஒருமுறை இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதுதான் இதன் ரேஞ்ச். 15 நிமிட சூப்பர் சார்ஜ் அம்சமும் உள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.59.89 லட்சம் முதல் தொடங்குகிறது. 5 பேர் வரை இதில் பயணிக்கலாம்.
‘ஒய்’ லாங் ரேஞ்ச் ஆர்.டபிள்யூ.டி: இந்த காரின் டாப் ஸ்பீடும் மணிக்கு 201 கி.மீ தான். 0-ல் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டலாம். ஒருமுறை இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 622 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதற்கு காரணம் இதன் பெரிய பேட்டரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.67.89 லட்சம் முதல் தொடங்குகிறது.
இரண்டு கார்களுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன?
- 9 ஸ்பீக்கர்கள்
- 15.4 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது ஃப்ரண்ட் ரோ டிஸ்பிளே
- 8 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது செகண்ட் ரோ டிஸ்பிளே
- ஆம்பியன்ட் லைட்டிங் அம்சங்கள்
- 8 எக்ஸ்டீரியர் கேமராக்கள்
- சென்ட்ரி மோட் உடன் கூடிய டேஷ் கேம் இடம்பெற்றுள்ளது
- முதல் வரிசை சீட்டுகளில் வென்டிலேஷன் வசதியும் உள்ளது