சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 166-வது வருமான வரி தின விழா கொண்டாட்டம் சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தலைமை வகித்து 2024-25 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை யின் முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் முன் விலை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “வருமான வரித்துறை வெளிப்படை தன்மையுடன் சிறப்பாக செயல்படும் வகையிலும், வரி செலுத்துவோர் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏற்ற வகையிலும் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஜிடிபி விகிதத்துக்கு வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு நேரடி வரி வருவாயும், ஜிஎஸ்டியும் பெருமளவு பங்களிக்கின்றன. உலகளவில் சில நாடுகள் தங்களது ஜிடிபியில் 30 சதவீதம் வரி வருவாயை கொண்டுள்ளன. நாம் 11 முதல் 12 சதவீதத்தை கொண்டுள்ளோம். நாம் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக பிரீத்தி கர்க் பேசுகையில்,“நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வருவாயாக ரூ.65 லட்சம் கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.43 லட்சம் கோடி அதாவது 60 சதவீதம் வரி வருவாயில் இருந்து கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பிடும் வகையாக நேரடி வரி வருவாயில் இருந்து ரூ.25 லட்சம் கோடி கிடைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் மொத்த வருவாயில் 39 சதவீதம் நேரடி வரி வருவாயால் பங்களிப்படுகிறது.
அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலமானது தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு, இந்தியளவில் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக இருந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் நிகர வசூல் இலக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.1.29 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.” என்று பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் சுதாகர் ராவ், எஸ்.பத்மஜா, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு பொது இயக்குநர் பிரதாப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.