இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டன் சென்றபோது, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தால் இந்திய நகைகள், வைரங்கள், மருந்துகள், தேநீர், அரிசி, ரசாயன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இங்கிலாந்து அரசு கணிசமாக குறைக்கும். அதேவேளையில், இங்கிலாந்தின் சொகுசு கார்கள், மதுபானங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு கணிசமாக குறைக்கும். குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சொகுசு கார்களின் விலை, இந்தியாவில் 30 சதவீதம் வரை குறையும் என்கின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒருசில பின்னடைவுகளைக் கொண்டிருந்தாலும் கூட, தமிழகத் துக்கு மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது என்பது இங்குள்ள தொழில் துறையினரின் கருத்து.
தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கமான ‘டான்ஸ்பா’வின் பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தமிழகத்துக்கு அதிக சாதகமாக அமைந்துள்ளது. ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள் ஏற்றுமதி, காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயன் தரும்.
குறிப்பாக, இங்கிலாந்தில் உற்பத்தியாகும் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் துறையினருக்கு பணி ஆணைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். அத்துடன், “இந்த ஒப்பந்தத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள, தொழில் துறையினருக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதேபோல், ‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி கூறும்போது, “இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஜவுளி துறைக்கு மிக பெரிய ஏற்றுமதி வாய்ப்பாக அமையும். ‘ஓஇ’ மில் நூல்களில் இருந்து உற்பத்தி ஆகும் ஜவுளி பொருட்களான காடா துணிகள், கரூர் ஜவுளி ரகங்கள் மற்றும் திருப்பூர் பின்னலாடை துணி வகைகள் மிகப் பெரிய ஏற்றுமதி பணி ஆணைகளை பெற உதவும்” என்றார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, “இந்த வரலாற்று ஒப்பந்தம், இந்திய ஜவுளி, துணி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கான திருப்புமுனையாக இருக்கும்.
தற்போது ஆண்டுக்கு 1.45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்த ஒப்பந்தத்தால் 3.25 பில்லியன் டாலராக இருமடங்கு உயரும். இதில் நெசவுத் துணி ஏற்றுமதிதான் 0.8 பில்லியனில் இருந்து 2 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும் மொத்த ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியின் சுமார் 70 சதவீதம் ஆகும்.
குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகளை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும். தற்காலிகப் பணிக்கு இங்கிலாந்து சென்றுள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இங்கிலாந்து தேசிய காப்பீட்டு கட்டணங்கள் செலுத்த தேவையில்லை” என்றார்.
விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் சக்திவேல் கூறும்போது, “இந்திய ஜவுளி மற்றும் விசைத்தறித் தொழிலில் முக்கிய மைல் கல் நடவடிக்கையாகும்” என்றார். அதேபோல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் டீமா சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.
இவ்வாறாக அதிக பலன்கள் கிட்டினாலும் கூட, சில பாதக அம்சங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார், இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன்.
“இந்தியா தற்போது இங்கிலாந்துடன் வர்த்தக மேல்நிலை… அதாவது, Trade Surplus கொண்ட நாடாக இருந்தபோதும், இங்கிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது, நமது உள்ளூர் எம்எஸ்எம்இ தொழில்முனைவோரின் போட்டித்திறனை பாதிக்கும்.
மின்சார வாகனங்கள் மீது சுங்க கட்டணம் குறைக்கப்படுவதால், இந்திய உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனங்கள் சந்தையை இழக்கும் அபாயம் உள்ளது.
நூல், காலணி, கடல் உணவுகளுக்கான சுங்கக் கட்டணம் குறைப்பு என்பது வளர்ச்சிக்கு போதுமானது அல்ல. இந்தியா தனது வர்த்தக உள்நோக்கங்களை மீட்டெடுத்து, எம்எஸ்எம்இ நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தங்களை மறுசீரமைக்க வேண்டும்” என்கிறார்.
இத்தகைய சில பின்னடைவுகள் இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, இந்திய தொழில் துறையினருக்கு அதிக சாதக அம்சங்களைக் கொண்டதாக இருப்பதையே தொழில் துறையினரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, தமிழக தொழில் துறைக்கு இது வலுசேர்க்கும் என்பதும் தெளிவாகிறது.
– இல.ராஜகோபால், இரா.கார்த்திகேயன்