சென்னை: ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பதற்காக ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த கூட்டு முயற்சி, “2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது. இந்த கூட்டாண்மையின் கீழ், டெர்ம் காப்பீடு, எண்டோவ்மென்ட், முழு ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்ஐசி-யின் திட்டங்களை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி விற்பனை செய்யும்.
நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 2,456 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் எல்ஐசி திட்டங்கள் கிடைக்கும். இதன்மூலம் கிராமப்புற, சிறுநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எல்ஐசி-யின் திட்டங்களால் பயனடைய முடியும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி கடந்த 1996-ல் நிறுவப்பட்டது. 1.13 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.