சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ). இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு உட்பட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இதில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த சேவை கட்டணத்தை யூஐடிஏஐ உயர்த்தி உள்ளது. இதன்படி தற்போது ஆதார் பயனர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். அதேபோல பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய ரூ.75 செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இந்த கட்டணம் ரூ.100 மற்றும் ரூ.50 என இருந்தது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ‘மை ஆதார்’ போர்ட்டல் வழியாக அடையாள மற்றும் முகவரியை வரும் ஜூன் 14, 2026 வரை கட்டணமின்றி அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 30, 2026 வரை குழந்தைகள், சிறார்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.