புதுடெல்லி: அரிய வகை கனிமங்களை இந்தியாவுக்கு வழங்கத் தயார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அறிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். இதைத் தொடர்ந்து அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர். அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கப்பாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் சீன அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். இதுதொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் வாங் யி தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்றிருந்தபோது உரம், அரியவகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சினையை சீன அமைச்சர் வாங் யிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்து உள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே சீன அமைச்சர் வாங் யி, நேற்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதன் பிறகு பிரதமர் மோடியைச் சந்தித்து, சீன அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை நடத்தினார் சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், பிரதமர் மோடி – வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.