அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் ரூ.10 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி 60.2 மில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இறால் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்திய இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளன.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் தொந்தரவால் ராமேசுவரம் மீனவர்கள் தொழில் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி தர இறால், நண்டு, கனவாய் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பாதிப்பால் தங்களது இறால் ஏற்றுமதி தொழில் பாதிக்கபடக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சே.நல்லதம்பி கூறியதாவது: அதிக வரி விதிப்பதால் அமெரிக்காவுக்கு இறால் மீன் ஏற்றுமதி மிகவும் பாதிப்பு அடையும். நம் நாடு இறால் ஏற்றுமதியில் 50 சதவீதம் அமெரிக்காவை நம்பியே உள்ளது. ஏற்கனவே இறால் ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் 2.29 சதவீதம் மற்றும் 5.77 சதவீதம் வரி இருந்த நிலையில், ஆக.28ம் தேதி முதல் 50 சதவீதம் வரி உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் இறால் ஏற்றுமதி 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடலில் இருந்து இறால் மீனை பிடித்து வரும் மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், இந்த அறிவிப்பால் மிகவும் குறைந்த விலைக்கு விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்களில் 80 சதவீதம் இறால் பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால் மீன்கள் ஆகும். இதில் பெரும்பாலும் ஆந்திரா பகுதியில் உள்ள இறால் பண்ணைக் குட்டைகளில் வளர்க்கப்படும் இறால் மீன்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வரி விதிப்பால் இறால் பண்ணை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர். அதே சமயம் இறால் மீன்களை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய மீனவர்களும் பாதிப்படுவர். இதனால் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தினமும் 10 டன் வரை இறால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மீனவர்களால் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தினமும் ரூ.10 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்கள் பிடித்து வரும் இறால் உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.