அமெரிக்காவில் ஜவுளி இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளி தொழிலுடன் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பி.கோபால கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது: வீட்டு உபயோக ஜவுளிக்கான உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமான கரூர் ஜவுளி நிறுவனங்களில் மேஜை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், திரைகள், பிற வீட்டு உபயோக ஜவுளிகள் என ஆண்டுக்கு ரூ.9,000 கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பெருமளவில், அதாவது ரூ.6,000 கோடிக்கான ஜவுளிகள் அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் சமீபத்திய ஜவுளி இறக்குமதி தொடர்பான சுங்கவரி அறிவிப்புகளால் கரூர் ஜவுளி நிறுவனங்கள் முன்னெப் போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த கொள்கை மாற்றம் எங்களின் ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, உற்பத்தியை சீர்குலைத்து, வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுடன், உலகச்சந்தையில் எங்கள் துறையின் போட்டித் தன்மையை பலவீனப்படுத்துகிறது.
மேலும், அமெரிக்க அரசு அதிக சுங்க வரிகளை அறிவித்திருப்பதால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே உற்பத்தி நிலையில் உள்ள ஆர்டர்களுக்கு தள்ளுபடி கோருகின்றனர். சுங்கவரி குறைப்பு அறிவிக்கப்படும்வரை சரக்குகளை அனுப்பாமல் நிறுத்தி வைக்க ஏற்றுமதியாளர்க ள் அறிவுறுத்தப்படுகின்றனர். சமீபத்தில் வழங்கப் பட்ட ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தற்போதைய எதிர்கால உற்பத்தி திட்டங்களை பாதிக்கிறது.
இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு கடுமையான பணப்புழக்க நெருக்கடி, வற்புறுத்தப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் தாமதத்தால் செயல்பாட்டு இழப்புகள் ஏற்பட்டு, கரூர் ஜவுளி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்க ளுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு கடன் வரம்புகளை அதிகரிக்க வேண்டும். பிணையம் இல்லாமல் கூடுதலாக 25 சதவீதம் வரை அதிகரித்து கடன் வழங்க வேண்டும். 2024-25ம் நிதியாண்டு வருவாயில் 20 சதவீத வரை அவசர காலக்கடன், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பிரீமியம் சிறப்பு குறைப்பு, 10 சதவீத ஊக்கத் தொகை, வட்டி குறைப்புத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துல், வட்டி மானியம் வழங்க வேண்டும். அதேபோல, தமிழக அரசு மின் கட்டணத்தில் 25 சதவீத மானியம், ஜவுளி நிறுவன வர்த்தக மற்றும் பயணிகளின் வாகனங்களுக்கு சாலை வரியில் 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தின் தொழில் துறை உற்பத்தி, அந்நிய செலாவணி வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு கரூர் ஜவுளி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் அவசர தலையீடு இல்லாவிட்டால், குறிப்பிடத்தக்க வேலை இழப்புகள் மற்றும் மாநிலத்தின் ஜவுளித் துறைக்கு நீண்ட கால சேதத்தை இந்த நெருக்கடி ஏற்படுத்தக் கூடும்.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் ஜவுளி தொழிலுடன் மாநில அரசு துணை நிற்க வேண்டும். மத்திய அரசிடம் சரியான நேரத்தில் எடுத்துரைப்பதுடன், மாநில அளவிலான ஆதரவு நடவடிக்கைகளும் இந்த சவாலான காலங்களை நாங்கள் சமாளிக்க உதவும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.