அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி நெருக்கடியில் உள்ள நிலையில், வர்த்தக வாய்ப்புகளை தொடர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்தி கட்டணத்தில் இருந்து 3 முதல் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, நேற்று முன் தினம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஜவுளித்தொழிலின் முக்கிய அங்கமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் கூறும்போது, “அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி நெருக்கடியில் உள்ளது. அதேசமயம் இதனை கரோனா தொற்றுகாலம் போல போக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு மானியம் வழங்க கடிதம் எழுதியுள்ளோம்.
இந்த சூழலை கருத்தில்கொண்டு, 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை, ஏற்றுமதியாளர்களும் தங்களுடைய உற்பத்தி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் தயாராகவும் இருக்கிறார்கள். லாபம் குறைவு என்றாலும், வர்த்தக வாய்ப்புகளை தொடரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 4 கட்டங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி அமெரிக்க வர்த்தகத்தில், ரூ. 3 ஆயிரம் கோடி தற்போதைய ஆர்டர் தேங்கி இருக்கிறது,” என்றார்.
பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால், 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்றுமதி ஆடை விலை உயர்வு ஏற்பட்டு, பின்னடைவை ஏற்படுத்தும். இந்திய ஆடைகள் சர்வதேச சந்தையில் சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்படும். இது நீண்டகாலத்துக்கு சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.
பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும். இந்திய அரசு ஏற்றுமதி தொழிலையும், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையும் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிக்கடன், உத்தரவாதம், காப்பீடு, வட்டி மானியம், கடனுதவி, வரிவிலக்கு போன்ற சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.